நாடு முழுவதும் உள்ள நகரங்களில் வழங்கப்படும் குழாய் தண்ணீரின் தரத்தை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நேற்று வெளியிட்டார். டெல்லியிலிருந்து பெறப்பட்ட 11 மாதிரிக்களின் தரத்தை ஆராய்ந்ததில், அங்கு குழாய்களின் மூலம் வழங்கப்படும் தண்ணீரின் தரம் இந்திய தர நிர்ணயம் விதித்த அளவுகோலுக்கு கீழ் உள்ளது என ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
இதேபோல், சென்னை, பெங்களூரு, சண்டிகர், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்படும் குழாய் தண்ணீரின் தரமும் மோசமாக உள்ளதென ஆராய்ச்சி முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “11 மாதிரிக்களை வைத்து நகரத்தில் வழங்கப்படும் குழாய் தண்ணீரின் தரத்தையும் முடிவு செய்யக்கூடாது. மாதிரிக்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்பதை ராம் விலாஸ் பஸ்வான் தெரிவிக்கவில்லை.
வார்டுக்கு ஐந்து மாதிரிக்களை எடுத்து, ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை பொதுமக்களிடையே வெளியிடுவோம். தரத்தை உண்மையாக அறிய வேண்டும் என்றால் 2,000 மாதிரிக்களை பெற வேண்டும். ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 1,55,302 மாதிரிக்கள் பெறப்பட்டது. இதனை டெல்லி ஜல் போர்டு ஆராய்ந்ததில், 98.57 விழுக்காடு மாதிரிக்கள் நன்கு சுத்தமாக உள்ளதென தெரிவிக்கப்பட்டது. தண்ணீரை வைத்து அரசியல் செய்வது சரி அல்ல” என்றார்.