தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதனை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் எனவும் அண்மையில் செய்தியாளர்களுக்கு மு.க. அழகிரி பேட்டியளித்தார். இந்நிலையில், மதுரை தெருக்களில் அவரின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என பெரிய எழுத்துகளில் இந்த சுவரொட்டியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ரஜினியும் அழகிரியும் அருகருகே அமர்ந்து பேசுவது போன்று இந்த சுவரொட்டியின் பக்கவாட்டில் ‘வெற்றிடம் நிரப்பப்படும்’ எனப் பொருள்படும் வகையில் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டியின் கீழே மு.க. அழகிரியின் பிறந்தநாளான ஜனவரி 30ஆம் தேதி குறிப்பிடப்பட்டு வாழிய பல்லாண்டு எனவும் அச்சிடப்பட்டுள்ளது.இந்த சுவரொட்டி மதுரையில் பரவலாக எங்கும் ஒட்டப்பட்டுள்ளதால், மு.க.அழகிரி, ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்வார் என அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.