சேதமடைந்த வீட்டில் வசித்து வரும் பொதுமக்களை பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் அருகில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலசபரி என்ற 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் மேலும் சில வீடுகள் தொடர் மழையால் சேதமடைந்து இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களை அருகிலுள்ள பள்ளிகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யவேண்டும் என்றும் கலெக்டர் அதிகாரிகளிடம் கூறினார். இதனையடுத்து கலெக்டர் கார்மேகம், பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டீன் வள்ளிசத்தியமூர்த்தியிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர். அதன்பின் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.