Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிவசேனாவுக்கு சோனியா எதிர்ப்பா? – பதிலளிக்கிறார் சரத் பவார்…!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது.

சந்திப்புக்குப்பின் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதிலளித்தார். சிவசேனாவுடனான கூட்டணிக்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்தாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர், “மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி குறித்துதான் பேசப்பட்டது.

மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நிலை குறித்து நான் சோனியா காந்தியிடம் விவரித்தேன். ஏ.கே. ஆண்டனியும் கூட்டத்தில் இருந்தார். இரு கட்சி மூத்தத் தலைவர்கள் இதுகுறித்து மேலும் விவாதிப்பார்கள். சிவசேனா கட்சிக்கு 170 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது குறித்து எனக்கு தெரியவில்லை. அவர்களிடம்தான் இதுகுறித்து கேட்க வேண்டும்” என்றார்.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் விதித்த காலஅவகாசத்திற்குள் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முன்வராத காரணத்தால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |