விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள வாலிப்பாறை பகுதியில் வனம் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த வாலிபர் தன்னை அனாதை என்றும் எனக்கென யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு பரிதாபப்பட்ட வனம் தனது வீட்டிலுள்ள ஆடு மாடுகளை பராமரிக்கும் வேலை கொடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி வனம் மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த வாலிபர் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனம், 7 பவுன்தங்க நகை மற்றும் 17 ஆயிரம் ரூபாய் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து வீட்டிற்கு திரும்பி வந்த வனம் பீரோ இருந்த பணம் மற்றும் நகைகளை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த வாலிபரும் மாயமானதை கண்டு சந்தேகமடைந்த வனம் உடனடியாக வருசநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டி தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முருக்கோடை மூலவைகை ஆற்று பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர் மீது ஏற்கனவே திருச்சி மற்றும் மதுரை காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.