Categories
மாநில செய்திகள்

கனமழையால் பயிர்கள் சேதம்…. அரசு செயலர் ஆய்வு….!!

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் லால்வேளா சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிவகங்கை ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாக கூட்ட அரங்கத்தில் வைத்து வடகிழக்கு பருவமழை குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறித்தும் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொடர் மழையின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மற்றும் துறைவாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து வருவாய் துறை, வேளாண்மைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை போன்ற துறைகள் மழைக்காலங்களில் முழுமையாக செயல்பட்டு மக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு காளையார்கோவில் தாலுகா அல்லூர் அங்காடியில் நடுவு செய்யப்பட்டுள்ள நிலத்தில் மழை நீர் தேங்கி நின்று சேதமடைந்துள்ளதை கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டார். அதுமட்டுமில்லாமல் திருப்பத்தூர் தாலுகா பட்டமங்கலம் ஊராட்சியை பட்டதி கண்மாய் முழு கொள்ளளவை அடைந்து தண்ணீர் கால்வாயில் செல்வத்தையும்,  பெரிச்சிக்கோவில் ஊராட்சியில் மணிமுத்தாறில் இருந்து கால்வாய் வழியாக பொன்னகுடி கண்மாய்க்கு நீர் செல்வதை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மானாமதுரை தாலுகாவுக்கு உள்பட்ட செய்குளத்தூர், சன்னதிபுதுக்குளம் மற்றும் கட்டிகுளம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளதை ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் கனமழையால் சேதமான நெற்பயிரை காண்பித்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் கூறியது, தொடர் மழையின் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் 116 ஹெக்டர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் சன்னதி புதுக்குளம் பகுதியில் 20 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

 

Categories

Tech |