இந்தியாவில் கொரோனா பரவல் காலகட்டத்தின் போதும், அதற்கு பின்னரும் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது பெரும்பாலான எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்களின் சேவையை விரைவில் நிறுத்தப்படும் என்று மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை விட 30% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியது, “கொரோனா வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 95% மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் 25% சிறப்பு ரயில்களாக இயக்கி வருகின்றன. மேலும் ரயில்வேயில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தற்போது திரும்பபெறப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறியது, “பழைய கட்டண முறையில் ரயில்களை இயக்க ரயில்வே மண்டலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டது. இந்த உத்தரவின் மூலம் நாடு முழுவதும் இயக்கப்படும் 1700 ரயில்களில் அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டணம் வசூலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.