பாமக தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு எங்கள் கூட்டணி அதிகமான இடங்களில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு சான்றுதான் சமீபத்தில் நடந்து முடிந்த இரு சட்டமன்ற இடைத்தேர்தல். அதேபோல் எங்கள் கூட்டணியின் வெற்றியை உள்ளாட்சித் தேர்தல் நிரூபிக்கும் என்றார்.
மேலும் அவர், கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வனத்துறையின் கீழ் முந்திரி காட்டில் இருக்கிறது. இந்த முந்திரி காடுகளில் விவசாயிகள் குத்தகை எடுத்து அதை அறுவடை செய்து வருவார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தளவு வருமானம் கிடைத்து வந்தது.
இதை தட்டிப் பறிக்கும் வகையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற முறையில் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள், வெளிநாடுகளைச் சார்ந்தவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது தேவையற்ற ஒன்று, இது கண்டனத்துக்குரியது, அரசு இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே விவசாயிகளே இந்தத் தொகையைப் பெறுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் மிக விரைவில் வரவிருப்பதால், அதிமுகவுடன் கூட்டணி பேசி எங்களுக்கான இடத்தைப் பெறுவோம், உரிமையை பெறுவோம். போட்டியிடும் அனைத்து இடங்களிலும் பாமக வெற்றிபெறும். அதேபோல் கூட்டணி கட்சி வெற்றிபெற பாமகவினர் கடுமையாக உழைப்பார்கள்’ என்றார்.