விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கக்கரைக்கோட்டை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இங்கு இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக பெருமளவு கொண்டு வந்து வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்கரைக்கோட்டை கிராமத்தில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் அடைக்கப்பட்டது. இதனால் நெல் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது.
மேலும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதே பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெல் அறுவடை பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடைக்கப்பட்ட அந்த கொள்முதல் நிலையத்தினை உடனடியாக திறப்பதற்கு வலியுறுத்தி விவசாயிகள் மன்னார்குடி-திருவோணம் கக்கரைக்கோட்டை பாலம் அருகில் சாலையின் குறுக்கே டிராக்டர்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது சம்பந்தப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அவர்களிடம் உறுதி அளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இவ்வாறு நடைபெற்ற சாலை மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.