போதையில் பணம் கேட்டு தகராறு செய்த 2 வாலிபர்களை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் கோவிந்த ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு இரண்டு வாலிபர்கள் கஞ்சா போதையில் வந்துள்ளனர். இந்த வாலிபர்கள் கோவிந்த ராவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் கோபமடைந்த வாலிபர்கள் அங்கிருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் இரண்டு வாலிபர்களையும் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாலிபர்கள் மலைக்கோட்டை பகுதியில் வசிக்கும் ரவுடிகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.