சைக்கிள் வாங்க சேமித்த பணத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுமி நிவாரண பொருட்களையளித்தார்.
சென்னையில் உள்ள புளியந்தோப்பு குட்டி தம்புரான் தெருவை சேர்ந்தவர்கள் காந்தி நாகராஜன்-சிவரஞ்சனி தம்பதியினர். இத்தம்பதியினரின் மகள் தான் ஜனனி (வயது 7). இவர் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். சென்னையில் பலத்த மழை காரணமாக ஜனனியின் வீடு உட்பட அருகில் இருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியது.
இதனால், அந்த பகுதியில் இருக்கும் மக்கள் உணவுக்காக அவதிபட்டனர். இந்நிலையில், ஜனனி வீட்டுக்கு அருகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்க விரும்பினார்.
அதன்படி, இவர் தனக்கு சைக்கிள் வாங்குவதற்காக சிறுக சிறுக ஐந்தாயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். அந்த பணத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பால் பாக்கெட், ரொட்டி ஆகியவற்றை மீட்பு படை உதவியுடன் அவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த சிறுமியின் செயலை அந்தப் பகுதி மக்கள் பாராட்டினர்.