தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு காரணமாக வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சாரல்மழை பெய்து இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதனால் பாளையங்கோட்டை பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
இந்த மழையின் காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்ட பகுதிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாபநாசம் காரையார் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைகள் கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 10,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடனாநதி அணையில் இருந்து 960 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த இரு அணைகளில் இருந்து வரும் 11,050 கன அடி தண்ணீரும் காட்டாற்று வெள்ளமும் கலந்து வருவதால் தாமிரபணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனைப் போலவே மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அவற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதன்பிறகு தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குற்றாலம், தென்காசி மற்றும் செங்கோட்டை போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது அதனைப்போலவே பழைய குற்றாலம் அருவி ஐந்தருவி, புலியருவி மற்றும் சிற்றருவி என அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.