தோட்டத்தில் மீண்டும் புலி நடமாடியதால் வனத்துறையினர் அதை கூண்டு வைத்து பிடிக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் கிராமத்தில் விவசாயி வேலு வசித்து வருகின்றார். இவர் மாடுகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வேலு தனது தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மர்ம விலங்கு கால்தடம் பதிவாகி இருந்தது. இதுகுறித்து வேலு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இருந்த கால் தடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் தோட்டத்தில் பதிவானது புலியின் கால் தடம் என்று உறுதியானது. இதுபோன்று சென்ற 3 தினங்களுக்கு முன் பழனிச்சாமியின் தோட்டத்தில் புலியின் கால் தடமானது பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் புலி நடமாடி வருகிறது. எனவே மனிதர்கள் மற்றும் கால்நடைகளை புலிகள் தாக்கும் முன்பு அதை கூண்டு வைத்து பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.