கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத அவர் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். இருப்பினும் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உள்பட 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் தலைமறைவானர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இன்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது: “இந்த மாணவியின் இழப்பு தனிப்பட்ட கருதமுடியாது. என் சொந்த மக்களுக்கு ஏற்பட்டது போல வலியைத் தருகிறது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் இதற்கான நீதிவிசாரணையை சரியான முறையில் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஏற்கனவே அரசு பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும். இது போன்ற நிகழ்வு இனி எங்கும் நடக்கக்கூடாது. அதற்கேற்றார் போல் நிச்சயம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.