கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு 10 நாட்களுக்குள் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓராண்டிற்கு முன்பு நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளதால் நான்கு லட்சம் என்பது தற்போது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
எனவே தொகையை உயர்த்தி அறிவிக்கவேண்டும். அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க வேண்டும். எனவே முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு அண்மையில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அதிமுக கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.