ஈக்வடார் என்ற தென் அமெரிக்க நாட்டின் ஒரு சிறையில் வன்முறை ஏற்பட்டு 68 கைதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் கொடூரமாக நடந்த இந்த கலவரமானது, இரண்டு கும்பல்களுக்கு நடுவில் நடந்த போட்டியால் ஏற்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, Guayaquil என்ற நகரின் அருகில் இருக்கும் லிட்டோரல் சிறையில் நேற்று முன்தினம் இரவில் கைதிகளுக்கிடையே வன்முறை ஏற்பட்டிருக்கிறது.
இந்த சிறையில் Los Choneros என்னும் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக கைதிகளாக இருக்கிறார்கள். சுமார் 700 கைதிகள் இருந்த இடத்தில் திடீரென்று வன்முறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. கைதிகள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்து ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் சிறையே வன்முறைக்களமாக மாறியுள்ளது. இதில் 68 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கலவரத்திற்கு பின் காவல்துறையினர், சனிக்கிழமை அன்று பகல் நேரத்தில் தான் சிறைக்குள் செல்ல முடிந்திருக்கிறது.
காவல்துறையினர், வன்முறை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் கைதிகளை எதிர்த்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைகளும், மேலும் நிலையை மோசமடையச் செய்யும் என்று விளக்கமளித்திருக்கிறார்கள்.