ஃபார்முலா ஒன் கார் பந்தயம் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் இன்னும் ஒரு பந்தயம் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் நேற்று பிரேசியின் கிராண்ட்ப்ரீ பந்தயம் நடைபெற்றது.
நடப்பு சீசனுக்கான சாம்பியன் பட்டத்தை மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த பிரிட்டன் வீரர் லூயிஸ் ஹாமில்டன் ஏற்கனவே உறுதி செய்துவிட்டார். இந்த சூழலில் பிரேசில் நாட்டின் சாவோ பவுலோ நகரில் உள்ள பந்தயக் களத்தில் நடைபெற்ற பந்தயத்தில் உலகின் பல நட்சத்திர ஓட்டுநர்களும் கலந்துகொண்டனர்.
இந்தப் பந்தயத்தில் கலந்து கொண்ட ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 33 நிமிடங்கள் 14 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து அசத்தினர். அவரைத் தொடர்ந்து டோரோ ரோசோ அணியின் பியரி கேஸ்லி இரண்டாம் இடமும், மெக்லரேன் அணியின் கார்லஸ் சாய்ன்ஸ் ஜுனியர் மூன்றாம் இடமும் பிடித்தனர். இப்போட்டியில் உலக சாம்பியன் ஹாமில்டனின் கார் ரெட்புல் அணியின் காருடன் மோதியதால் அவருக்கு இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் அவர் இப்பந்தயத்தில் ஏழாம் இடம் பிடித்தார்.நடப்பு ஃபார்முலா ஒன் தொடரின் கடைசிப் பந்தயமான அபுதாபி கிராண்ட்ப்ரீ பந்தயம் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.