தொடங்கப்பட்டு வெறும் ஒரே ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மொபைல் பிராண்ட் ரியல்மிதான். இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பது சதவிகிதத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரியல்மி, இந்த ஆண்டு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன், Disruptive Tech Brand போன்ற விருதுகளையும் வாங்கியுள்ளது.
ரியல்மி சிஇஓ மாதவ் சேத் சமூக வலைதளமான ட்விட்டரில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர். புது ஸ்மார்ட்போன் வெளியீடு, அப்டேட்டுகள் குறித்த தகவல் என எல்லாம் அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்துதான் வெளியாகும். இதனால் ரியல்மி ரசிகர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தை எப்போதும் கவனித்தே வருவார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் Realme 3, Realme 3i மொபைல்களில் வெளியாகவிருக்கும் சாஃப்ட்வேர் அப்டேட்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ரியல்மி அப்டேட்டுகள் குறித்த தகவல்களை அவர் தனது ஐபோன் மூலம் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை அவர் உடனடியாக டெலிட் செய்துவிட்டபோதும், அதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய பிராண்டாக உள்ள நிறுவனத்தின் சிஇஓ ஒருவரே, அவரது நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் மற்றொரு ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல முன்னதாக ஒன்பிளஸ் விளம்பர தூதர் ராபர்ட் டவுனி ஜூனியரும் தனது ஹுவாவே மொபைலை பயன்படுத்திச் செய்த ட்வீட் வைரலாகியிருந்து.