விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் சமீபத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் இந்து ஆலயங்கள் குறித்து பேசியது சர்சைக்குள்ளானது. இதற்கு இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை அடுத்த பூந்தமல்லியில் வசிக்கும் அதிமுக பிரமுகர் ஆறுமுகம் என்பவர் திருமாவளவனை கொச்சைப்படுத்தி புகைப்படம் ஒன்றை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, அவரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறுகையில், “சமூக வலைத்தளங்களில் இதுபோன்று பதிவிடுவதன் மூலம் சாதிய மோதல் உருவாக வாய்ப்புள்ளது. இது எங்களை புண்படுத்தும் விதமாகவும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிமுக பிரமுகரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.