தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள், அணைகள், கால்வாய்கள்,குளங்கள் மற்றும் ஏரிகளில் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்ட முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து ஏற்காடு வட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்காடு வட்டமலை பாதையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு மலைப்பாதைகளில் பாறைகள் உருண்டு விழும் நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. அதன் காரணமாக போக்குவரத்து தடை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அத்தியாவசிய நோக்கமின்றி சுற்றுலா நோக்கில் ஏற்காட்டுக்கு செல்வதை தற்போதைய சூழலில் தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்காட்டுக்கு செல்லும் மலைப்பாதையில் கொண்டப்பநாயக்கன்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் கடந்த மாதத்தில் இரண்டு முறை மண்சரிவு ஏற்பட்டது. மற்றொரு பிரதான சாலையான குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. எனவே இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக பயணிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். முடிந்த அளவிற்கு ஏற்காடு செல்வதை மக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.