பாகிஸ்தானில் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் 20 பேர் விடுவிக்கப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்படவிருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேரை பாகிஸ்தான் கடற்படை சிறை பிடித்தது. அவர்களுக்கு நான்கு வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வாகா எல்லையில் இந்திய நாட்டு அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளதாக மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.
இது குறித்து சிறை கண்காணிப்பாளரான இர்ஷாத் ஷா தெரிவித்துள்ளதாவது, குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் தான் அதிகமாக சிறையில் இருந்தார்கள். நான்கு ஆண்டுகளாக தண்டனை பெற்று வந்த அவர்களுக்கு அரசின் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை கிடைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
சமூக நல அமைப்பான, எதி டிரஸ்ட் என்ற அறக்கட்டளை லாகூரின் வாகா எல்லைக்கு மீனவர்களை அழைத்து செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. அதாவது, அரபிக்கடல் பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டிற்கு இடையே எல்லை கோடு தெளிவாக இல்லாத காரணத்தால் இரண்டு நாட்டைச் சேர்ந்த மீனவர்களும், எல்லையைத் தாண்டி மீன் பிடிப்பதும், சிறை பிடிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.