திருமணமான இஸ்லாமிய ஆண்கள் தங்களது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற, மூன்று முறை தலாக் கூறி, பிரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நீண்ட காலமாக வழக்கத்திலிருந்த இந்த முறையை ஒழிப்பதற்காக, கடந்த ஜூலை மாதம் முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டு, முத்தலாக் கூறுவது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த மெஹ்ராஜ் பேகம் என்ற பெண்ணுக்கு, அவருடைய கணவர் மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்துள்ளார். அப்பெண் ஆண் குழந்தையைப் பெற்றுத்தரவில்லை என்று கூறி, மெஹ்ராஜின் கணவர் தலாக் செய்துள்ளார். அது மட்டுமில்லாமல், மெஹ்ராஜ் பேகத்தை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணமும் செய்துள்ளார்.
இதையடுத்து, அப்பெண் காவல் நிலையத்திற்குச் சென்று தலாக் கூறிய தன் கணவன் மீது புகாரளித்துள்ளார். புகார் கொடுத்ததையடுத்து, காவல் துறையினர் அப்பெண்ணின் கணவர் மீது முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ”எனக்கு சட்டத்தின் மீது பெரும் நம்பிக்கை உள்ளது. எனது கணவரின் செயலுக்கான தண்டனை அவருக்கு கிடைத்து, எனக்கான நீதி நிலைநாட்டப்படும் என்று நம்புகிறேன்” என்றார். முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டாலும் முத்தலாக் கூறி விவாகரத்து செய்து வருவது தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.