குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மாலினி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் தமிழினியா என்ற மகள் இருந்தார். இதில் ரமேஷ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் இறந்து விட்டார். இதன் காரணமாக மாலினி தன் மகளுடன் தொப்பம்பாளையத்தில் உள்ள அவரது சகோதரி ரேணுகா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கணவர் ரமேஷ் நினைவாகவே மாலினி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை நான் தற்கொலை செய்து கொள்வேன் என மாலினி அடிக்கடி ரேணுகா மற்றும் உறவினர்களிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதனிடையில் மாலினிக்கு திருமண நாள் வந்தது. இதன் காரணமாக தன் கணவர் வாழ்ந்த இலங்கை அகதிகள் முகாம் வீட்டிற்கு மாலினி சென்றுவிட்டு வருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு தன் மகள் தமிழினியாவையும் அங்கு அழைத்து சென்றார். அங்கு சென்றிருந்த மாலினி தன் கணவர் நினைவால் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அப்போது மாலினி தான் வைத்திருந்த குளிர்பானத்தில் சாணிப்பவுடரை கலந்து மகளுக்கு கொடுத்துவிட்டு அவரும் குடித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாலினியை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் தமிழினியா சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் தமிழினியா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழினியா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் மாலினி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.