திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் கமல்ஹாசனுக்கு ‘உங்களில் நான்’ என்ற பாராட்டு விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ரஜினி, “எடப்பாடி பழனிசாமியின் அரசு நான்கு, ஐந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 பேர் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. தடைகளைத் தாண்டி ஆட்சி நீடித்துக்கொண்டிருக்கிறது. அதிசயம் இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும்” என்று வழக்கம் போலத் தனது அரசியல் வருகை குறித்து சூசகமாக முடித்தார்.
இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘புரட்சித்தலைவி நமது அம்மாவில்’ ரஜினியைத் தாக்கி கட்டுரை வெளியாகியுள்ளது. ‘ஆச்சரியம் பூச்சொரியும் எடப்பாடியாரும், சூசக ஆரூடம் சொன்ன சூப்பர் ஸ்டாரும்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரையில், முதலமைச்சராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடியார் ஒரு ரியல் தலைவராக உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நடத்துநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினி காந்த், கன்னித்தமிழ் பூமியின் ‘சூப்பர் ஸ்டார் ஆவோம்’ என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்கும் அதிசயம் தொடரும் என்பதைத்தான் நாளையும் நடக்கப் போகிற அதிசயம் என்று ரஜினி கூறியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.