பெட்ரோல் பங்கில் வைத்து கார் தீப்பிடித்து எரிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊஞ்சனை புதுவயலய் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது பேரனுடன் தேவகோட்டையில் உள்ள சந்தைக்கு காரில் சென்றார். இந்நிலையில் திருப்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பாண்டியன் சென்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் காரில் டீசலை நிரப்பியுள்ளார். இதனை அடுத்து பாண்டியன் தனது காரில் இருந்தபடியே பணத்தை கொடுத்த போது தான் அந்தப்பெண் பெட்ரோலுக்கு பதிலாக டீசலை நிரப்பியது தெரியவந்துள்ளது.
அதன்பின் அருகிலிருந்த மெக்கானிக்கை வரவழைத்து காரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கில் தீ பற்றி ஏரிய ஆரம்பித்துள்ளது.இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மெக்கானிக் பெட்ரோல் பங்கிலிருந்து காரை சிறிது தூரம் நகர்த்தியுள்ளார். இதனால் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்படாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.