டாஸ்மார்க் கடையில் அரிவாளை காட்டி மிரட்டி மதுபாட்டில்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள சக்திபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 2 வாலிபர்கள் கடைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து டாஸ்மார்க் கடையின் விற்பனையாளர் துளசி ராஜமூர்த்தியை அரிவாளை காட்டி மிரட்டி மதுபானம் கேட்டுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீர் பாட்டில் ஒன்றை எடுத்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள் மேலும் மதுபானங்களை கேட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து விற்பனையாளர் தரமறுத்ததல் கடைக்குள் புகுந்த வாலிபர்கள் துளசி ராஜமூர்த்தி மற்றும் கடையின் ஊழியர் முருகேசன் ஆகிய 2 பேரையும் தாக்கிவிட்டு கடையில் இருந்து 1,800 ரூபாய் மதிப்பிலான மது பானங்களை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து துளசி ராஜமூர்த்தி திருப்புல்லாணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வாலாந்தரவை பகுதியை சேர்ந்த சத்தியநாதன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்மேகம் என்பவரை தேடி வருகின்றனர்.