குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு ‘போக்சோ’ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், ‘ மாணவர்கள், சமூக வலைதளங்களில், முன்பின் தெரியாதவர்களிடம் friend request, chatting போன்றவற்றில் ஈடுபட வேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ அரசுப் பள்ளியில் படித்துதான் இந்த நிலைக்கு தான் வந்துள்ளேன். எங்கு படிக்கிறோம் என்பதை விட எப்படிப் படிக்கிறோம் என்பதே முக்கியம். இந்தியாவிலேயே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அவர்களின் பாதுகாப்பிற்காக தனிப்பிரிவை ஏற்படுத்தி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை நகரில் மட்டும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் செய்பவர்கள் பெரும்பாலும், குழந்தைகளுக்குத் தெரிந்தவர்களாகவே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன’ என்றார்.