கோவையில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தாய் தனது மகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பெண் குழந்தையின் தந்தையாக இவர்களது வலியை என்னால் உணர முடிகின்றது. குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை ஒருபோதும் தாமதப்படுத்தப்படாது.
இதுபோன்ற சம்பவங்கள் பெண் பிள்ளைகளின் கல்வியை பாதிப்பதற்கு அரசு விடாது.பெண் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று அரசு விரும்புகிறது. மேலும் பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு அரசு பள்ளிகளில் போக்சோ சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனைப்போலவே தனியார் பள்ளிகளிலும் போக்சோ விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.