தமிழகத்தில் கனமழை காரணமாக வாக்காளர் சிறப்பு முகாம் கூடுதலாக இரண்டு நாட்கள் நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. நவம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆனால் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முகாம் நடைபெற வில்லை. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி 27 மற்றும் 28ம் தேதிகளிலும், கூடுதலாக 20, 21 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்னும் நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் (பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்) மேற் கொள்ள விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். விண்ணப்பதாரர் 25 வயதுக்கு கீழ் இருந்தால் வயது சான்று அளிக்க வேண்டும். வயதுச் சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல், பள்ளி நிறைவுச் சான்றிதழ் நகல் ஆகியன சமர்ப்பிக்கலாம். பெயர் சேர்க்க – படிவம் 6, பெயர் நீக்க -படிவம் 7, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம்-படிவம் 8 பாகம், பார்டு மாற்ற-படிவம் 8 ஏ படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் (பள்ளிகளில்) வாக்காளர் சிறப்பு முகாம்நடைபெறும் . வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பதாரர்கள் வசிப்பிட முகவரி, சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம் ஒன்றும் சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை,சமீபத்திய மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு ரசீது ஆகிய ஏதேனும் ஒன்றின் நகலை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம்.