தென்மண்டல கவுன்சிலிங் கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கைகளை அமைச்சர் பொன்முடி முன்வைத்தார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் 29வது தென்மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளாததால் அவருக்கு பதிலாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசிடம் தென்னிந்திய மாநிலங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருவதால், இந்த கூட்டத்திற்கு என்னை கலந்து கொள்ள சொன்னார். கவுன்சிலில் பேசவேண்டிய உரையை என்னிடம் வழங்கியிருந்தார். அதன்படி தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். நதிநீர் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பேசி தீர்த்துக் கொள்வது என பல முடிவுகள் செய்யப்படுகிறது.
தமிழக அரசின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் சுமூகமாக தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை தமிழக அரசுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே தமிழக அரசு மற்றும் எம்பிக்கள் கடிதம் எழுதினால் அதற்கு மத்திய அரசு இந்தியில் பதில் கடிதம் எழுதி அனுப்பி வருகிறது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கண்டனம் தெரிவிக்கும் போது மட்டும் ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்புவது மற்ற சமயங்களில் இந்தியில் கடிதம் அனுப்புவது போன்ற செயல்களை செய்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வாரணாசியில் நடந்த ஆட்சி மொழி மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி என்றும், உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட தற்போது ஆங்கிலத்தில் எழுதப் படுவது இல்லை என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது 8வது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சி எனவும், இந்தியை திணிக்கும் முயற்சி எனவும் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.