தமிழகத்தில் கூடுதலாக 3 சைனிக் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் நூலகம் திறப்பு விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார். அதன்பிறகு உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில் மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் நூலகங்கள் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. நூலகத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன. அதற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
மேலும் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படாமல் தடுக்க பள்ளி தோறும் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைனிக் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்த மாநில அரசு உதவி செய்யும். தமிழகத்தில் புதிதாக மூன்று சைனிக் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.