கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் ஏற்கனவே 7 கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் 8-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 17 லட்சத்து 96 ஆயிரத்து 974 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இதில் முதல் தவணையாக 13 லட்சத்து 3 ஆயிரத்து 794 நபர்களுக்கும், 2-வது தவணையாக 4 லட்சத்து 93 ஆயிரத்து 80 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் 8-ம் கட்ட முகாமில் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் என 600 மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவற்றில் 5 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த முகாம் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதற்கு முன்பாக 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 63 ஆயிரத்து 429 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆகவே தஞ்சாவூரில் இதுவரை 18 லட்சத்து 60 ஆயிரத்து 503 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.