இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்திற்காக ஆஸ்திரேலியாவிற்கு பரிசளிக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரத்தில் ரோவில்லே என்ற புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய-இந்திய சமூக மையத்திற்கு, இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்காக மகாத்மா காந்தியின் உருவ சிலை பரிசளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் இந்தியாவின் சார்பில் பரிசளிக்கப்பட்ட காந்தியின் உருவச்சிலையை கடந்த 12-ஆம் தேதியன்று திறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில், சிலை திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, மர்ம நபர்களால், மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனை கடுமையாக எதிர்த்த பிரதமர் ஸ்காட் மாரீசன் தெரிவித்துள்ளதாவது, கலாச்சார நினைவு சின்னங்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த அளவிற்கு அவமரியாதை செய்வது வெட்கக்கேடானது. இது மிகப்பெரும் ஏமாற்றத்தை தருகிறது. ஆஸ்திரேலிய-இந்திய சமூகத்தை அவமரியாதை செய்துவிட்டனர். சிலையை சேதப்படுத்தியவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.