கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பியதன் காரணமாக உபரிநீருடன் சேர்ந்து மழைநீர் வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணையானது நிரம்பி அதிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீரானது அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்றது. இதனுடைய மொத்த நீர்மட்டம் 17.50 அடி ஆகும். இந்நிலையில் மழை மற்றும் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் கெட்டிசமுத்திரம் ஏரியானது நிரம்பி அதிலிருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக உபரி நீரும், மழைநீரும் சேர்ந்து ஏரியின் அருகில் உள்ள தோட்டங்களுக்கு புகுந்தது. இந்த நிலையில் தண்ணீர் தோட்டங்களில் வடியாமல் தேங்கி நிற்பதால் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான வாழைகள் அழுகி நாசமடைந்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் கூறியபோது “எங்கள் தோட்டத்தில் நேந்திரம், கதலி, ரோபஸ்டா, செவ்வாழை போன்ற வாழைகள் சாகுபடி செய்துள்ளோம்.
இவையெல்லாம் இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் தொடர் மழையால் கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பி அதிலிருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இதில் மழைநீரும் கலந்ததால் தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து வாழைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தோட்டங்கள் அருகே உள்ள நீரோடைகளில் பரிசலில் சென்று அறுவடைக்கு தயாராக உள்ள வாழைத்தார்களை வெட்டி எடுத்து வருகிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.