சட்டவிரோதமாக மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 9 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகில் விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு சொந்தமான மண் சாலை இருக்கிறது. இந்த சாலையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரத்தின் மூலம் மண் கடத்தி செல்லப்பட்டது. அதாவது நூற்பாலை நிர்வாகத்தினர் மண்ணை கடத்தி தங்களுக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வருகின்றனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சக்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தபின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் மண் கடத்தியதாக நூற்பாலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பொக்லைன் எந்திரங்கள், 3 லாரிகள், 3 டிடாக்டர்கள் உட்பட 9 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.