உரம் குடோன் மீது மரம் விழுந்த விபத்தில் 5 பெண்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் ஒரு தனியார் காபி தோட்டத்தில் கூலித்தொழிலாளர்களாக அதே பகுதியை சேர்ந்த குழந்தையம்மாள், ஜெயமணி, உஷாதேவி, கமலா மற்றும் மற்றொரு கமலா ஆகிய பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் காபி செடிக்கு உரம் போடுவதற்காக அதை எடுக்க குடோனுக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த காய்ந்த மரம் ஒன்று குடோன் மீது விழுந்தது. இதனால் குடோனின் மேற்கூரை இடிந்து உரம் எடுக்க சென்ற 5 பெண்களின் மீதும் விழுந்து விட்டது.
இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் 5 பேரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 5 பெண்களுக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களில் ஜெயமணி கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.