வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% உள் ஒதுக்கீட்டில் 10.5% உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அன்று தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திமுக அரசு பதவிக்கு வந்த பின்னர் அரசாணையும் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவசரம் கருதி மதுரை கிளைக்கு இந்த வழக்கை மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.
அந்த விசாரணையில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதுபற்றி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு தவறானது.
மதுரை கிளை உத்தரவால் தமிழக அரசின் மொத்த நிர்வாகமும் பல சிக்கல்களை எதிர் கொண்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.