தந்தை கீழே தள்ளிவிட்டதால் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புத்தேரி ஆட்டுப்பட்டி காலனியில் தொழிலாளியான தங்கவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோலப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் கோலப்பன் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் புத்தேரி குளத்திலிருந்து கோலப்பன் சில மீன்களைப் பிடித்து வந்து, அதனை குழம்பு வைத்து சாப்பிடுவதற்காக தங்கவேலுவிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு தங்கவேலு மறுத்ததால் தந்தை மற்றும் மகனுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த தகராறில் ஆத்திரமடைந்த தங்கவேலு தனது மகனை கீழே தள்ளியுள்ளார். இதனால் கோலப்பனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கோலப்பனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கோலப்பன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து கோலப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தங்கவேலு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.