45 வயதான ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, பருவ நிலை மாற்றம் குறித்தும் வெப்ப மயமாதல் குறித்தும் தனது கருத்துகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருவார். இந்நிலையில், அவர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ள டெல்லி காற்று மாசு குறித்த கவலைகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காற்று மாசு குறித்து இந்தியா கேட் அருகே நடைபெற்ற போராட்டத்தின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள அவர், “உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் காற்று மாசால் உயிரிழக்கின்றனர். மக்களைக் கொல்வதில் மாசுதான், இந்தியாவின் ஐந்தாவது மிகப்பெரிய காரணி” என்றுப் பதிவிட்டுள்ளார்.
“அனைத்து வயதினரும் பங்கேற்ற இந்தப் போராட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 1 போராட்டம் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே இதுகுறித்து ஆராய்ந்து இரு வாரங்களில் பதில் அளிக்கப் பிரதமர் அலுவலகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. 2 விவசாயக் கழிவுகளை எரிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், காற்று மாசுக்கு எதிராகப் போராடப் பசுமை நிதியைப் பயன்படுத்த, இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் விவசாயக் கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க உரிய உபகரணங்களை விவசாயிகளிடம் வழங்க வேளாண்துறை அமைச்சகத்துக்குப் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வாக்குறுதிகளைக் கொடுத்தாலும், டெல்லியில் காற்று நல்ல நிலைமைக்கு வரும் வரை மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் லியோனார்டோ டிகாப்ரியோ வலியுறுத்தியுள்ளார்.
https://www.instagram.com/p/B5Av6eolKYJ/?utm_source=ig_web_button_share_sheet