மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் உறவினர்கள் 6 பேர் பீகாரில் நடந்த சாலை விபத்தில் பலியாகியுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் இன்று நடந்த விபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர்கள் ஆறு பேர் பலியாகியுள்ளனர். பாட்னாவில் உள்ள உறவினரின் இறுதி சடங்குக்கு சென்று திரும்பிய போது காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், அந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சிக்கந்தர் -ஷேக்பூர் பிரதான சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் பலியானவர்களில் லால்ஜித் சிங் (சுஷாந்த் சிங்கின் மைத்துனர்), நேமானி சிங், ராமச்சந்திர சிங், குழந்தை தேவி, அனிதா தேவி, பிரீதம் குமார் ஆகியோர் அடங்குவர் என்று தெரிவித்துள்ளார்.