வாலிபர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யகோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அகரதிருநல்லூர் காமராஜ் தெருவில் செல்வமணி மகன் குமரேசன் வசித்து வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும், இரணியன் என்ற குழந்தையும் இருக்கின்றனர். இவர்களில் குமரேசன் மோட்டார் சைக்கிளில் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். இதனையடுத்து குமரேசன் கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென குமரேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அகரதிருநல்லூர் பிரதான சாலையில் குமரேசனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் குமரேசனின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதன்பின் குமரேசனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி மீது ஒருவர் கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது. இதனைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் வடிவழகன் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்தப் பேச்சுவார்த்தையில் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு அவர்களிடம் உறுதியளித்தார். அதன்பின் வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு குமரேசனின் உடலை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக திருவாரூர்- தஞ்சை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.