வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி 580 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ இருக்கும் வானியல் அதிசயமான மிக நீண்ட பகுதியளவு சந்திர கிரகணம் நிகழ இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒறே நேர்கோட்டில் வரக்கூடிய நிகழ்வே கிரகணம். இந்த நிகழ்வு எப்போதும் பௌர்ணமி எனப்படும் முழு நிலவு நாளில் தான் ஏற்படும். இந்த நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி சந்திரகிரகணம் வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி நிகழ இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதில் பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும் என்றும், முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக நுட்பமாக சிவப்பு நிறமாக மாறும் நிலவை காண வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் இந்திய நேரப்படி நவம்பர் 19 அன்று மதியம் 12.49 மணிக்கு தொடங்கும் என்று விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இதுபோன்ற நீண்ட சந்திரகிரகணம் கடந்த 1,480ம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்துள்ளதாகவும் இதேபோல் இனி அடுத்து வரும் 2,669 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி சந்திரகிரகணம் நிகழும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிசய நிகழ்வு இந்தியாவில் வடகிழக்கு பகுதிகளில் உள்ள அருணாசலப்பிரதேசம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் மிக குறுகிய நேரத்திற்கு சந்திர உதயத்திற்கு பிறகு தான் தெரியும். வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இது தெளிவாக தெரியும். 580 ஆண்டுகள் கழித்து நடக்க இருக்கும் இந்த வானியல் அதிசய நிகழ்வை காண மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.