இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மொஞ்சனூர் பகுதியில் அன்புசெல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் எலச்சிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் எதிரே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்ற இளைஞரும் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த அன்புச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பலத்த காயமடைந்த ஜெய்சங்கரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி ஜெய்சங்கர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.