தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதன்படி சென்னை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை முடிந்த பின்னரும் இன்னும் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கின்றன. அதில் சென்னை பழைய வண்ணாரப் பேட்டை காத்பாடா, ராமதாஸ் நகர் மற்றும் லேபர் லைன் ஆகிய பகுதிகளில் சாலை மற்றும் வீடுகளில் தேங்கியுள்ள மழை நீருடன் கழிவு நீரும் கலந்து நிற்பதால் துர்நாற்றம் மற்றும் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் அந்த அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று வண்ணாரப்பேட்டை தங்கசாலை மணிகூண்டு மெட்ரோ ரயில் எதிரில் சாலையில் இருபுறமும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் இருபுறமும் அரை கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் உக்கிரபாண்டி, வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆகியோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் எம்எல்ஏ வந்து பேச வேண்டும் என்று கூறுகினர்.
அதன் பிறகு ராயபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் உடனடியாக கழிவுநீர் கலந்த மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனால் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அந்த பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை டேங்கர் லாரி மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்தச் சாலை மறியல் காரணத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.