கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் முஸ்லாம்புரா என்ற கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுபான கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிநபர் ஒருவர் நடத்தி வரும் அந்த மதுபான கடையால், ஆண்கள் வேலைக்குச் செல்லாமல் மது அருந்துவது மற்றும் அந்த வழியாக செல்லும் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த மதுபான கடையை அகற்றக் கோரி மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனால் பெண்கள் மதுபான கடையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மதுபான கடை உரிமையாளர்களும், சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதில் 6 பெண்கள் காயம் அடைந்தனர். இதனால் கோபமடைந்த அந்த பகுதி மக்கள் இளைஞர்களோடு ஒன்று திரண்டு மதுபானக் கடையை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்களை கைது செய்ய முயன்றதால் பெண்கள் வாசலை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரவு நேரம் என்று பார்க்காமல் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பெண்களை கைது செய்து அழைத்து சென்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.