அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக உள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக மணி மீது புகார்கள் எழுந்தது.
இந்தநிலையில் நெய்வேலியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை பெற்றுத் தருவதாக கூறி 17 லட்சம் ரூபாயை இடைத்தரகர் செல்வகுமார் என்பவர் மூலம் மணி பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக சேலம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ் பணமோசடி செய்த மணியின் மீது மேலும் பல புகார்கள் வரக்கூடும் என்பதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் உதவியாளர் மணியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.