பஞ்சாப் மாநிலத்தை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தன் கடைசி காலத்தில் அந்த பகுதியில் வாழ்ந்து இறந்ததாக கூறப்படுகிறது. அவருடைய நினைவாக தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்துவாரா அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டும் என்பது சீக்கியர்களின் புனித கடமைகளில் ஒன்றாகும். இந்தப் புனித தலத்திற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை பாதை போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் கர்தார்பூர் வழித்தடம் மூடப்பட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு கர்தார்பூர் வழித்தடம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று முதல் மீண்டும் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது. சீக்கிய மதத்தின் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள அபரிதமான மரியாதையை இந்த முடிவு காட்டுகிறது என்று பதிவிட்டுள்ளார்.