தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்ல ஆட்டோ ரிக்ஷாகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே 150க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உரிய அனுமதி பெறாமல் இயக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், புதுச்சேரி தடத்தில் , கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே உள்ள குறுகிய தூரத்தை கருத்தில் கொண்டு, ஒரே இடத்தில் அனுமதி பெறுவது அவசியம். கடலூரில் உள்ள போக்குவரத்து அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டால், மேற்கொண்டு அனுமதி பெற தேவையில்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரியில் உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை என்றாலும், தமிழ்நாடு மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள போக்குவரத்து துறையினர், அந்தந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ஆட்டோக்களும் தமிழ்நாடு போக்குவரத்து துறை வழங்கிய சான்றிதழை பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்தகைய உரிமம் அல்லது அனுமதி இல்லாத பட்சத்தில், சம்பத்தப்பட்ட ஆட்டோ அல்லது வழித்தடத்தில் பயணிகள் போக்குவரத்து உட்பட எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில் இருந்து தடை செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.