தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நேரடி தேர்வுகள் தொடங்கும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி முறையில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சந்தோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா காரணமாக டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் தொடர்ந்து 3 பருவ தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதனால் இந்த ஆண்டுக்கான முதல் கட்டத் தேர்வு ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுமா என்று மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம்.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழக அரசின் ஆணைப்படி நேரடி முறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி தேர்வுகளும் நேரடி முறையிலேயே நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் பருவத்தேர்வு வருகின்ற டிசம்பர் 20-ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், நேரடி தேர்வானது சட்டப் பள்ளி மற்றும் பல்கலைக் கழகத்தில் இணைவு பெற்ற அனைத்து சட்ட கல்லூரிகளுக்கும் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.