தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தற்போது வெள்ள நீர் வடிந்து சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், அது மேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 18ம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.
அதனால் இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.